இந்திய இராணுவத்துக்கு நன்றி கூற தவறிவிட்டீர்கள்; ஜே.வி.பி.எம்.பி.கிண்டல் ஜீவா சதாசிவம் இந்தியா, தற்போது இலங்கைக்கொரு கேந்திர ஸ்தானமாக விளங்குவதுடன், இலங்கைக்கு பெருமளவிலான உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, சார்க் மாநாட்டைச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகால நீடிப்பு பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது; இலங்கைஇந்திய உறவு இன்று உன்னதமான இடத்தில் உள்ளது. இந்தியாவின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் உதவி மெச்சத்தக்கதாகும். இந்தியா இலங்கைக்கு ஒரு கேந்திர இடமாக விளங்குகின்றது. அதுமாத்திரமல்லாது சார்க் மாநாட்டின்போது 8 நாட்டுத் தலைவர்களும் எமது பாராளுமன்ற வளாகத்தில் ஒன்றுகூடியமை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொரு முக்கியமான விடயமாகும். இம்மாநாட்டின்போது எட்டு நாட்டுத் தலைவர்களும் பயங்கரவாதத்தை ஒழிக்கவேண்டும் என்றே ஒருமித்துக் குரல் எழுப்பியுள்ளனர். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஏகோபித்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். சார்க்கின்போது பயங்கரவாத ஒழிப்புக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இதற்கமைய கொழும்பில் ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது. பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பது தொடர்பான கருத்துக்களே இப்பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எமது படையினரும் பயங்கரவாதிகளை தோற்கடித்து வருகின்றனர். கூடியவிரைவில் வடக்கு உட்பட அனைத்து மக்களுக்கும் ஜனநாயகத்தை பெற்றுக்கொடுப்போம்.

இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் இல்லாதொழிக்கவே 8 நாட்டு தலைவர்களும் முன்வந்துள்ளனர்.

இவ்வாறான பல்வேறு விடயங்கள் சார்க் மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.தே.க.ஆசனம் தொடர்பாக மாத்திரமே பேசி வருகின்றது.

வெளிநாட்டு அதிகாரிகள் மேல் ஒரு ஈ கூட மொய்க்காதளவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இது ஒரு முக்கியமான விடயமாகும். சார்க்கின் பின்னர் இலங்கை சர்வதேச ரீதியில் முன்னுரிமை பெற்றுள்ளது என்றார்.

இதன்போது குறுக்கிட்ட ஜே.வி.பி.எம்.பி. பிமல் ரட்நாயக்க இலங்கைக்கு பாதுகாப்பு வழங்கிய இந்திய இராணுவத்தினருக்கு நன்றி கூறத் தவறிவிட்டீர்கள்.

இந்திய படையினர் எங்கு வந்து இறங்கினார்கள்? எங்குவந்து தங்கியிருந்தார்கள் என்று கூறமுடியுமா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், இந்திய வீரர்கள் தங்குவதற்காகவே குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டது என்றும் தெரிவித்தார்.