இலங்கை தொடர்பாக சர்வதேச நாடுகளில் செய்யப்பட்டிருந்த பொய்ப் பிரசாரங்களுக்கு கொழும்பில் சிறப்பாக நடந்து முடிந்த சார்க் மாநாடும் அதன் தீர்மானங்களும் சிறந்த பதிலடியாக அமைந்துள்ளதாக பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது; கடந்த ஒரு மாத கால சம்பவங்களில் முப்படைகளைச் சேர்ந்த 106 பேரும் பொதுமக்களில் 24 பேரும் உயிரிழந்து உள்ளனர், அதேபோல் முப்படைகளைச் சேர்ந்த 647 பேரும் பொதுமக்களில் 37 பேரும் காயமடைந்துள்ளனர் . படையினர் தொடர்ச்சியாக வெற்றிகரமாக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். படையினரின் வெற்றிகள் தொடர்பாகவும் புலிகளின் மௌனம் தொடர்பாகவும் பகுப்பாய்வாளர்கள் தற்போது ஆராய்கின்றனர். நாம் ஒளிந்திருந்து, மறைந்திருந்து தாக்கும் கெரில்லாக்களுடன் மோதுகின்றோம். குகையில் மறைந்திருக்கும் புலியை தாக்குகின்றோம். ஆனால் நாம் ஒரு போதும் புலியின் வாலைப்பிடிக்கமாட்டோம்.

படையினர் பெற்றுவரும் வெற்றிகளை புலிகளின் நட்பு சக்திகள் கவலை கொண்டுள்ளனர். படையினரின் படை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொள்கின்றன. ஆனால் நாம் எமது இலக்கில் இருந்து விலகப்போவதில்லை.

உலகில் பெரும்பாலான நாடுகளுக்கு பயங்கரவாதமே பொது எதிரியாக உள்ளது. சார்க் தலைவர்கள் அந்த பொது எதிரியை ஒழிக்க உறுதிபூண்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கூட புலிகளுக்கு எதிரான போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

சார்க் மாநாட்டை ஒட்டி புலிகள் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தை அறிவித்து உலக நாடுகளுக்கு நல்ல முகத்தைக்காட்ட முயன்றனர்.ஆனால் அந்த யுத்தநிறுத்த அறிவிப்பை தாங்களே மீறி முகமாலை இர?ணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி தமது உண்மையான முகத்தை காட்டியுள்ளனர்.

புலிகள் நாளாந்தம் பின்னடைவுகளை கண்டு வருகின்றனர். அதனால் அவர்கள் பாரிய அழிவுகளை ஏற்படுத்த கூடிய தந்தரோபாய நடவடிக்கை திட்டங்களை தீட்டி வருகின்றனர். இவ்வாறானதொரு திட்டத்தை சிலாபத்தில் நாம் கண்டுபிடித்து முறியடித்தோம்.

அண்மையில் புலிகளின் ஆயுதக்கடத்தல் செய்யும் முக்கிய தலைவர் ஒருவரை சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர். புலிகளின் ஆயுதக்கடத்தலை தடுக்க அமெரிக்காவும் எமக்கு உதவி வழங்கியுள்ளது.

வடக்கை புலிகளிடம் இருந்து மீட்டு அந்த பகுதி மக்களுக்கு ஜனநாயகத்தை கொடுக்கும் காலம் நெருங்கி வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை படையினர் துணிச்சலோடு செய்து வருகின்றனர்.

சார்க் மாநாட்டை இங்கே நடத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், என்னபலன் என கேட்டனர். இவையெல்லாம் பிற்போக்குத்தனமான விடயங்கள். இந்த சார்க் மாநாடு மூலமாக இலங்கை தொடர்பாக சர்வதேசத்தில் செய்யப்பட்ட பொய் பிரசாரங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. அந்த பொய்ப் பிரசாரங்களுக்கு சார்க் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

படை நடவடிக்கை மூலம் விடுவிக்கப்பட்ட மடு தேவாலயம் தற்போது உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு விரைவில் உற்சவங்கள் நடைபெறும் . இவ்வாறு நாம் வன்னியை விடுவித்து அந்த மக்களின் வாழ்வில் சுபிட்சத்தை ஏற்படுத்துவோம்.