ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இரு நாட்களுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் நெடுந்தீவு பகுதிக்குச் சென்றிருந்தார்.
யாழ் குடாநாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து அப்பகுதி மக்களினது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் அவ்வப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக பல மாதங்களுக்கு முன்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தமைக்கு இணங்கவே அமைச்சர் அவர்களது இவ்விஜயம் அமைந்திருந்தது.
நேற்றைய தினமும் இன்றைய தினமும் நெடுந்தீவில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களுடன் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள் அம்மக்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கடுமையான உழைப்பினால் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் நெடுந்தீவு பிரதேசமானது இன்றைய நிலையில் கடந்தகால அனர்த்தங்கள் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து நிற்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.
இந்த நிலையில் குடிநீர் பாதைகள் செப்பனிடப்படாமை மின்சாரம் வீட்டு வசதிகள் மலசல கூடங்கள் கடல் மற்றும் தரைப் போக்குவரத்து போன்ற அடிப்படைத் தேவைகளில் குறைபாடுகள் நிலவுவதாகப் பொதுமக்கள் எடுத்துக் கூறியதையடுத்து வெகுவிரைவில் கட்டம் கட்டமாக இப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதை சுட்டிக் காட்டிய அமைச்சர் அவர்கள் அம்மக்களின் கடல் போக்குவரத்து வசதி கருதி இன்னுமொரு பாரிய படகினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இப்போதே தான் எடுத்துள்ளதாகவும் இன்னும் சில வாரங்களில் இப்படகு போக்குவரத்திற்காக விடப்படும் என்றும் தெரிவித்தார். அத்துடன் தரைப் போக்குவரத்தில் ஈடுபடுத்த பெரியளவிலான பேரூந்து ஒன்றை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து அப்பகுதி தொண்டர் ஆசிரியர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் விளையாட்டு கழகப் பிரதிநிதிகள் சமூகப் பெரியார்கள் போன்ற பலரையும் அமைச்சர் அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது நெடுந்தீவு பகுதியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளார். அமைச்சர் அவர்களது நெடுந்தீவுப் பயணத்தின் போது நெடுந்தீவு மகா வித்தியாலயம் மற்றும் சுப்பிரமணிய வித்தியாலய இல்லங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டிகளிலும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





