ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. நேற்றுமாலை நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இந்த கௌரவப்பட்டம் வழங்கப்பட்டது. உலக சமாதானத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் பயங்கரவாதத்தை முறியடிப்பதில் வெற்றியீட்டியமைக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்பல்கலைக்கழகத்தின் பொன்விழாவையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதற்கு 100நாடுகளைச் சேர்ந்த 6000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவுக்கு ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ள இலங்கைக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஊடகத்துறை மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.