யாழ். நகரிலிருந்து காங்கேசன்துறை வரையான பிரதானவீதி (கே.கே.எஸ்.வீதி) விஸ்தரிப்புத் தொடர்பாக சகல தரப்புகளுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்க்கமான முடிவுஎடுக்கப்படும். வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அவர், தமது அலுவலகத்தில் நேற்று நடத்திய கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் இந்து மாமன்றத்தின் சார்பில் அதன் உபதலைவர் ஆறுதிருமுருகன், முருகன் மன்றத்தின் யாழ். பிராந்திய பணிமனை நிர்வாக அலுவலர் வி.ஜெயசிங்கம், யாழ். பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங்கன், விரிவுரையாளர் பொ.அகிலன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். கே.கே.எஸ். வீதியை விஸ்தரிக்கும் தற்போதைய திட்டத்தினால் ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து கூட்டத்தில் பங்கு பற்றியவர்கள் ஆளுநருக்கு விளக்கிக் கூறினார்கள். இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினரையும், வேலை ஒப்பந்தகாரரையும் கல்லூரி அதிபர்களையும் ஆலய நிர்வாகிகளையும் அழைத்து எதிர்வரும் 10ம் திகதி கூட்டமொன்றை நடத்துவதற்கு தாம் முடிவு செய்துள்ளதாகவும் அக்கூட்டத்தில் ஆராய்ந்து தீர்க்கமான முடிவு ஒன்று எட்டப்படும் என்று ஆளுநர் உறுதியளித்துள்ளார்.