இலங்கை அரசாங்கத்துடனான அமெரிக்காவின் உறவுகள் தொடர்ச்சியாக பேணப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமாதானத்தையும், சுபீட்சத்தையும் கட்டியெழுப்ப அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ஒபாமா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1789ம் ஆண்டுமுதல் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தின் நிழல் இல்லாத ஓர் சூழ்நிலையில் இலங்கை முதல்தடவையாக சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கதென அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை, குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், சட்டம் ஒழுங்கு, ஊடக சுதந்திரம் போன்ற விடயங்கள் தேசத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையின்போது முக்கியத்துவம் பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.